கவிதை : கூடா நட்பு

Xavier_kavithai

உன்
ஊசிக்குத்தல்கள்
இணைக்க
என்றே நினைத்திருந்தேன்
நீ
நூல் கோர்க்காமல்
குத்திக் கொண்டிருந்த
சேதி தெரியாமல்.

நீயோ
இன்னும்
குத்திய இடத்திலேயே
குத்திக் கொண்டிருக்கிறாய்
என் கிழிசல்
ஒட்டுப் போடப்படவில்லை.

காயங்களின்
காலங்கள் நீண்டபோது
என்
உறக்கம் கலைத்து
எட்டிப் பார்த்தேன்,
நூல் இல்லா
நிலையும் அறிந்தேன்.

காரணமற்ற காரணங்களுக்காய்
என்
முதுகைக் காட்டிக் கொண்டிருந்த
அறியாமையால்
இன்னும் கொஞ்சம்
கூடிப் போனது
வலி.

நூல் கோர்த்துக் கொள்
இல்லையேல்
கிழிசலோடு எனை
வாழவிடு என்று
அப்போது தான்
முதன் முதலாய் சொன்னேன்.

ஊசிக்குக் காதில்லை
என்கிறாய்
சிரித்துக் கொண்டே.

அப்போதே
என்னை
ஆடை மாற்றவேனும்
அனுமதித்திருக்கலாம்
நீ

0

கி.மு :: நெற்றிப் பொட்டில் ஆணி !!!

தெபோராளும், பாராக்கும்

debora

ஏகூர் என்பவர் இஸ்ரயேலர்களின் வழிகாட்டியாக இருந்து வந்தார். அவர் வழிகாட்டியாக இருந்தவரைக்கும் இஸ்ரயேலர்கள் கடவுளின் வழியில் நடந்து வந்தார்கள். ஏகூர் இறந்தார். இஸ்ரயேலர்கள் மீண்டும் கடவுளை நிராகரித்து விட்டு அன்னிய தெய்வங்களை வழிபடவும், சிற்றின்பம், வன்முறை போன்றவற்றில் நாட்டம் கொள்ளவும் ஆரம்பித்தனர். கடவுள் அவர்களை மீண்டும் தண்டித்தார்.

அப்போது கானானியரின் மன்னனாக யாபீன் என்பவர் ஆட்சிசெய்து வந்தார். அவர் பலத்த படையினரோடு வந்து இஸ்ரயேல் மக்களைத் தாக்கி மீண்டும் அவர்களை அடிமை நிலைக்குக் கொண்டு வந்தார். இஸ்ரயேலர்கள் மக்கள் கடவுளை மறந்து சிதறிக் கிடந்ததால் அவர்களால் போரில் வெற்றி பெற இயலவில்லை.

யாபீன் மன்னனின் படைத்தளபதி பெயர் சிசெரா. அவன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அவனுடைய படைபலம் மிகப் பெரிது. அவனிடம் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட இரும்பு ரதங்கள் இருந்தன. எத்தனை பெரிய படையாய் இருந்தாலும் அவனுடைய ரதங்கள் அவற்றை நிர்மூலமாக்கி வந்தன. அவன் கடுமையான சட்டங்கள் பலவற்றைப் போட்டு இஸ்ரயேல் மக்களை கடுமையாகப் பழிவாங்கினார். இஸ்ரயேலர்கள் உழைப்பின் பயன்களை எல்லாம் அரசனுக்கே கொடுக்க வேண்டிவந்தது. அவர்களால் எதையும் சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை. இஸ்ரயேல் குல பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இஸ்ரயேல் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

நிலமை கட்டுக்குள் அடங்காமல் போவதைக் கண்ட மக்கள் ஒன்றுகூடினார்கள்.

‘நம்முடைய இந்த நிலமைக்குக் காரணம் நம்முடைய பாவங்கள் தான். நம்மில் பலர் பாகாலை வணங்குகிறோம். இனிமேல் நாம் மனம் திரும்பி கடவுளின் வழிக்கு வரவேண்டும். இனிமேல் நமக்கு நம்முடைய தெய்வத்தைத் தவிர வேறு தெய்வங்களே இருக்கக் கூடாது. அப்போது தான் நம்முடைய கஷ்டகாலத்துக்கு ஒரு விடிவு கிடைக்கும்.’ ஒருவர் பேசினார்.

‘ஆம் உண்மை தான். அனைத்துக்கும் காரணம் நம்முடைய கீழ்ப்படியாமை தான். இனிமேல் நம்முடைய கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கையில் கூட இதே போல பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எல்லாமே கடவுளை விட்டு விலகிப்போனபோது நடந்தவை தான்’

‘நாம் கண்டிப்பாக நம்முடைய நம்முடைய பாவ வழிகளை விட்டு விலகியாக வேண்டும்’

‘கடவுளை வழிபடுவது, அவரை நாவால் துதிப்பதும், பலி செலுத்துவதும் மட்டுமல்ல. அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவும் வேண்டும். எனவே இனிமேல் யாரும் கானானியரோடு கலக்கக் கூடாது. சிற்றின்பச் சுழலில் சிக்கவும் கூடாது’

மக்கள் அனைவரும் நீண்டநேரம் விவாதித்தார்கள். கடைசியில் எல்லோரும் ஒரே குரலாக கடவுளை நோக்கி மன்றாட ஆரம்பித்தார்கள். இஸ்ரயேல் மக்கள் மனம் திரும்பி தன்னுடைய வழியில் வந்ததைக் கண்ட கடவுள் மகிழ்ந்தார். அவர்களை மீட்பதென்று முடிவெடுத்தார்.

தெபோராள் இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாகத் தெரிந்தெடுக்கப் பட்டாள்.

தெபோராள் மன உறுதியும், சிந்தனைத் தெளிவும், இறை பக்தியும் நிறைந்தவள். அவள் ஒரு பேரீச்சை மரத்தின் அடியில் வசித்துவந்தாள். கடவுளை மனதில் நினைத்தவர்களுக்கு அதை விட மனநிறைவு அளிக்கக் கூடிய வேறு சொத்துக்கள் ஏது ? தெபோராவும் உலக சொத்து சுகங்கள் மீதெல்லாம் அக்கறைப்படாமல் கடவுளையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

ஒருநாள் அவர் பாராக் என்னும் இஸ்ரயேல் வீரர் ஒருவரை அழைத்தாள். பாராக் நல்ல பலசாலி. பல போர்களை முன்னின்று நடத்திய அனுபவம் மிக்கவன்.

‘பாராக். சிசெராவின் கொடுமைகளிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய நேரம் வந்து விட்டது’ தெபோராள் சொன்னாள்.

‘இதைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’ பாராக் ஆனந்தமாய்ச் சொன்னான்.

‘இந்த வெற்றி உன் மூலமாய் தான் வரும்’

‘என் மூலமாகவா ? புரியவில்லையே ?’

‘நீதான் படையைத் திரட்டிக் கொண்டு போய் சிசெராவைத் தோற்கடிக்க வேண்டும். கடவுள் உன்னுடன் இருப்பார்.’

‘ஐயோ.. சிசெராவை எதிர்க்க என்னால் முடியாது. அவரை எதிர்க்குமளவுக்கு நம்மிடம் படை வலிமையும் இல்லை’

‘கடவுள் தான் அனைவரையும் படைத்தவர். அவரால் தோற்கடிக்கப் பட முடியாத மனிதர் இல்லை. அவர் நம்மோடு இருக்கிறார். தைரியமாகச் செல்’

‘இல்லை… எனக்குப் பயமாக இருக்கிறது. என்னால் முடியாது’ பாராக் மீண்டும் மறுத்தார்.

‘கடவுள் உன்னோடு வந்தால் கூட பயமா உனக்கு ?’ தெபோராள் கேட்டாள்.

‘கடவுள் வருவது இருக்கட்டும். நீங்கள் என்னோடு வந்தால் நான் நம்பிக்கையுடன் போரிடச் செல்கிறேன். முடியுமா உங்களால்’ பாராக் கேட்டார்.

‘சரி… நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால், நீ கடவுளை முழுவதும் நம்பாததால் செசரா உன் கையால் சாகமாட்டான். அவனுடைய சாவு ஒரு பெண்ணினால் தான் வரும்’ தெபோராள் சொன்னாள்.

‘ஒரு பெண்ணினால் சிசெரா என்னும் மாபெரும் வீரன் கொல்லப்படுவானா ? வேடிக்கைக் கதையாக இருக்கிறதே’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்ட பாராக் அதை வெளிக்காட்டாமல் தெபோராவிடமிருந்து விடைபெற்று இஸ்ரயேல் படையைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். பெரும் இஸ்ரயேலர் படை ஒன்று தயாரானது.

சில நாட்கள் சென்றபின் தெபோராள் பாராக்கை மீண்டும் அழைத்து,’ போருக்கான தருணம் வந்து விட்டது. சிசெராவிற்கு எதிராகப் போரிடப் புறப்படுவோம்’ என்றாள். படை கடவுளின் ஆதரவுடன் சிசெராவை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டது.

போர் துவங்கியது.

இஸ்ரயேலரின் படைக்கு முன்னால் சிசெராவின் இரும்பு ரதங்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிசெரா பெரும் பின்னடைவைச் சந்தித்தார். போரில் இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. சிசெரா ரதத்தை விட்டுத் தப்பியோடினார். தப்பியோடிய சிசெரா யாகேல் என்பவளுடைய கூடாரத்தில் தஞ்சம் புகுந்தார். யாகேலின் கணவனும், யாபீன் அரசனும் நண்பர்களாக இருந்தார்கள்.

‘வாருங்கள். நீங்கள் சிசெரா தானே ? ‘ யாகேல் வரவேற்றாள்.

‘ஆம்.. இஸ்ரயேலர் படை நம்முடைய படையைச் சிதறடித்து விட்டது. நான் தப்பியோடி இங்கே வந்தேன். நல்லவேளை இது உன் கூடாரம். இங்கே எனக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’ சிசெரா சொன்னான்.

‘கண்டிப்பாக … உங்களைப் போன்ற ஒரு வீரரைப் பாதுகாப்பது எனக்கு மகிழ்ச்சியல்லவா ? மிகவும் களைப்பாய் இருக்கிறீர்கள். ஏதேனும் குடிக்கத் தரவா ?’ யாகேல் கேட்டாள்.

‘கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்’

யாகேல் உள்ளே சென்று சிசெராவிற்குக் குடிப்பதற்காக பால் கொண்டு வந்தாள். சிசெரா அதைக் குடித்துச் சோர்வகற்றினார்.

‘மிக்க நன்றி யாகேல். நான் உள் அறைக்குச் சென்று கொஞ்சம் இளைப்பாறுகிறேன். யாரேனும் என்னைத் தேடி வந்தால் நான் இங்கே வரவேயில்லை என்று சொல்’ சிசெரா சொல்லிவிட்டு உள் அறைக்குச் சென்று படுத்தார். கடுமையான போரும், தப்பியோடிய களைப்பும் அவரை தூக்கத்துக்குள் இழுத்துச் சென்றன.

யாகேலின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து சிசெரா அயர்ந்து உறங்கினான். ஆனால் யாகேலோ மன்னன் யாபீனையும், தளபதி சிசெராவையும் மிகவும் வெறுத்தாள். அது சிசெராவிற்குத் தெரியவில்லை.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிசெராவைப் பார்க்கப் பார்க்க யாகேலுக்குள் இருந்த வன்மம் வெளிவந்தது. சிசெராவைக் கொல்வதற்குச் சரியான சந்தர்ப்பத்தைக் கடவுளே தனக்கு அளித்திருப்பதாய் நினைத்தாள். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் இவனைப் பழிவாங்க வேறு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். சிசெராவைக் கொல்வதென்று முடிவெடுத்தாள்.

வீட்டிலிருந்த பெரிய சுத்தியல் ஒன்றைக் கைகளில் எடுத்தாள். கூடாரத்தில் இருந்த நீளமான ஆணி ஒன்றையும் எடுத்தாள்.

நேராக தூங்கிக் கொண்டிருந்த சிசெராவின் அருகில் சென்று அவனுடைய நெற்றிப் பொட்டில் ஆணியை வைத்தாள். கோபமும், ஆத்திரமும், வெறுப்பும் அவளுடைய கண்களில் கொப்பளித்துப் பாய, கையிலிருந்த சுத்தியலால் ஆணியை ஓங்கி அடித்தாள். என்ன நடக்கிறது என்பதைப் சிசெரா புரிந்து கொள்ளும் முன் யாகேல் அடித்த ஆணி அவனுடைய நெற்றிப் பொட்டைப் துளைத்து மறுமுனை வழியாக வெளியே வந்து தரையில் புதைந்தது.

சிசெரா துடிதுடித்து இறந்தான். தெபோராளின் வாக்குப் படி அவனை ஒரு பெண்ணே கொன்று விட்டாள்.

தப்பியோடிய சிசெராவைத் தேடிக் கொண்டு பாராக் அந்தப் பக்கமாக வந்தான். வாசலிலே பாராக்கின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த யாகேல் அவனுக்கு எதிரே வந்து நின்றாள்.

‘வாருங்கள் … நீங்கள் பாராக் தானே’

‘ஆம் பெண்ணே… நீ யார் ?’

‘உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி’ யாகேல் புன்னகைத்தாள்.

‘இன்னும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை பெண்ணே. சிசெரா தப்பியோடிவிட்டான். சிசெராவைக் கொன்றபின் தான் முழுவெற்றி கிடைக்கும். அவனைத் தான் தேடி அலைகிறேன்’ பாராக் சொன்னார்.

‘சிசெராவா ? அவன் இதோ என்னுடைய வீட்டின் உள் அறையில் படுத்திருக்கிறார்’ யாகேல் சொன்னதும், பாராக் தன்னுடைய உடைவாளை உருவிக் கொண்டு அவளுடைய கூடாரத்துக்குள் பாய்ந்தார். உள்ளே சிசெரா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.

‘செசரா உன் கையால் சாகமாட்டான். அவனுடைய சாவு ஒரு பெண்ணினால் தான் வரும்’ என்று தெபோராள் சொன்ன வார்த்தைகள் அவனுடைய மனதில் எதிரொலித்தன. கடவுளின் செயலை எண்ணி வியந்தான்.

சிசெரா கொலைசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டதும் யாபீன் மன்னன் நடுங்கினார். இஸ்ரயேலர்களுக்கு அஞ்சி ஒடுங்கினான். இஸ்ரயேலர்களின் கை எங்கும் ஓங்கியது. அவர்களுக்கு எதிராக இறுக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுகளும் அறுந்தன.

இவ்வாறு இஸ்ரயேல் மக்களைக் கடவுள் ஒரு கொடுமையான மன்னனிடமிருந்து பாதுகாத்தார்.

கவிதை : வாடகை அலைகள்

உன் வாழ்க்கை
உனக்கான விருது,

யாரோ தைத்த
பொருந்தாத சட்டைக்குள்
நீ
நுழைய வேண்டிய
நிர்ப்பந்தம் என்ன ?

நிலம் மாறி நட்டாலும்
மல்லி
வாசம் மாறி வீசுமா ?

தோட்டக் காரன் நட்டாலும்
வீட்டுக் காரன் வைத்தாலும்
ரோஜா
பாகுபாடின்றி பூத்திடாதா ?

உன்னை நீயே
வனைந்து முடி,
உன்னை விட அதிகமாய்
உன்னை நேசிப்பவன் யார் ?

உன்னை விட அழகாய்
உன் இயல்புகள்
அறிந்தவன் யார் ?

உள்ளுக்குள்
முத்திருக்கும் உண்மையை
சிப்பியை விட அருகில்
சீக்கிரமே உணர்வது யார் ?

உன் வாழ்க்கையின்
அடித்தளத்தை
நீயே அமைப்பதே
சாலச் சிறந்தது.

பொறு,
உன் எல்லைக்கு கள்ளி வைப்பது
உன் விருப்பம்,
அப்படியே
அடுத்தவனும் முள் தான்
வைக்கவேண்டுமென்று
முரண்டும் பிடிக்காதே.

அவன்
முள் நடுவதும்,
சந்தன மரம் நடுவதும்
அவனுடைய இலட்சியக் கடல்.
அங்கே
உன் அலைகள்
அலைய வேண்டாம்

 

 மனவிளிம்புகளில் நூலில் இருந்து….

 

பிடித்திருந்தால்…வாக்களியுங்கள்

மழைக் கவிதைகள்

1

 

 

 

 

பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான
மழை.

 

 

2

 

 

ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.

.

.

.

3
மழைத்துளி விழுந்து
மண்ணின் மணம் எழுந்தது
எழுதினேன்,
கூவத்தின் மணம் கிளம்பும்
சென்னையில் இருந்து கொண்டு.

.

.

.

 

 

 

 

வெப்பம் தணித்த மழை
கிளப்பி விடுகிறது
பன்றிக் காய்ச்சல்
பீதியை

 

.

.

5.
 

ஜலதோஷம் பிடிக்கிறது…
என்றாலும்
குழந்தைக்கு
நனைவதே பிடிக்கிறது !

.

.

6

ஒவ்வோர் மழையும்
சில விவசாயிகளை
அழ வைக்கிறது
சில விவசாயிகளைத்
தொழ வைக்கிறது !

 

.

.

.

 

  

7

ஒவ்வோர் மழையும்
ஏதோ ஓர்
மேகத்தைப் பிரிகிறது
ஏதோ ஓர்
மோகத்தைப் பிழிகிறது

.

.

 

8

அடுத்த அடி
மரணத்தின் மடியிலா ?
டிரெயினேஜ் பயத்தில்
பாதங்கள் பதறுகின்றன
முழங்காலளவு மூழ்கிய சாலையில்

.

.

 

9
 

செல்போனில்
சிக்னல் கிடைக்காத காதலர்களும்
டிவியில்
சீரியல் தெரியாமல் பெண்களும்.
பெய்யெனப் பெய்யும் மழையை
நிறுத்தாமல் வைகிறார்கள்.

 

.

.

10

 

முதல் மழையில் நனையாதே
சுகக்கேடு வரும்.
பாட்டியின் குரல்
இன்னும் ஒலிக்கிறது
ஒவ்வோர் முதல் மழை தரிசனத்திலும்.

 

.

.

.11
கூரை ஓட்டிலிருந்து
அருவியாய்க் கொட்டும்
மழையில் நனைந்த
அரைடிராயர் சுகம்
அடுக்குமாடி தேனீர் சன்னல்களில்
சுத்தமாய் இல்லை.

.

.

 

12

 

 

மழைத் துளியல்ல,

சோர்வின் வடுக்களைச்
அழுத்தித் துடைக்க
மேகப் பருத்தி நெய்து
இறக்கும்
மழைத் துணி !

பிடித்திருந்தால்… வாக்களிக்கலாமே….

ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் !

 

அன்று காலை
ஒரு இராமன் வந்தான்
வில்லை ஒடிக்காமலேயே
விலகிச் சென்றான்,
விசாரித்த போது
விபரம் தெரிந்தது,
சீதையின் தோழி மிக அழகாம்.

0

பிறிதொருநாள்
தனியே காத்திருந்தாள் சீதை,
இன்னோர் இராமன்
தனியே வந்தான்,

சீதையை விட
வில்லே பிரதானமென்று
வில்லோடு ஓடிவிட்டான்.

0

பிறகு வந்த
சில இராமர்கள்
கலியுக புகைபோக்கிகள்
வில்லை தூக்கும் போதே
எல்லொடிந்து போனார்கள்.

இன்னும் சிலர்
சீதை,
வில்லை ஒடித்தால் மட்டுமே
மணக்க சம்மதம் என்று
இன்னொரு ஒப்பந்தம் இட்டார்கள்.

0

கடைசியில்
ஒர் நாள்
அப்பழுக்கற்ற இராமன் வந்து
வில்லையும் ஒடித்து
சீதையின் கரத்தையும் பிடித்தான்.

சில வருடங்கள் சென்ற பின்
ஓர்
அதிகாலை அவசரத்தில்
சீதை சினந்தாள்,

இராவணனிடம் கூட
புஷ்பகவிமானம் இருந்தது

0

கவிதை : அழகாராய்ச்சி…

மகரந்தம் தாங்கும்
கர்ப்பப் பையாய்
மலர்களைப் பார்ப்பதும்,
பனித்துளி ஏந்தும்
மேடையாய் இதழ்களைப் பார்ப்பதும்,
கனவுகளின்
வாசனை சாலையாய்
காதலில் பார்ப்பதும்
பார்வைகளைப் பொறுத்தது.

நீ
பூவை பூவாகவேனும்
பார்.

0

சூரிய ஒளிச் சமாச்சாரங்களையும்,
கோள்களின்
சுற்றுப் பாதை சங்கதிகளையும்,
தூர அகல
அறிவியல் ஆராய்ச்சிகளையும்
மனசுக்குள் உட்கார்த்தி
உரையாடாதே.

இரவு நேரத்தில்
நிலா வீதியில் நிற்கையில்.

0

அறிவியல்,
மூளையின் செல்களுக்குள்
செல்லட்டும்.
ரசனை
மனசின் நரம்புகளுக்குள்
பாயட்டும்.

சோதனைக் குடுவை கிடைத்தாலும்
சோதனைச் சாலைக்கு வெளியே
அதை
பூந் தொட்டியாய் பயன்படுத்து.

0

அகழ்வாராச்சிகள் எல்லாம்
தேவைதான்,
ஆனாலும்
அழகாராய்ச்சிகளையும் மறுதலிக்காதே.

ரசிக்கும் கண்கள் இருந்தால்
கோபுர கலசங்கள்
மட்டுமல்ல,
கூழாங் கற்களும் கூட
இயற்கைச் சிற்பியை
உனக்கு அறிமுகப் படுத்தும்.

உளிகளில் மட்டுமல்ல
அலைகளிலும்
சிற்பத்தின் சாவிகள் இருக்கின்றன.

0

நதிகள் இல்லாத,
பௌர்ணமிகள் விழிக்காத,
நட்சத்திரங்கள் முளைக்காத,
இருட்டின் காட்டுக்குள்
இருக்க நேர்ந்தால்
வெளிச்சம் வரும் வரை
விலகி இருக்காதே.

இரவை ரசி.
கருப்புச் சாயத்தைப் பூசிய
காற்றை ரசி.

ஒற்றைக் கீற்றில்
அத்தனை இருட்டும்
எங்கே ஒளிகின்றன என
மனசுக்குள்
வெளிச்ச வழக்காடு.
0

எழுது,
டைரிகளில் எழுதிப் பழகாத
ஜாம்பவான்கள்
ஜனித்ததில்லை.
நிராகரிக்கப் படாத
கவிதைகள்
ஆண்டவனாலும் நேர்ந்ததில்லை.

எழுது.
ஊருக்காக
இல்லையேல் உனக்காக.

0

நேசி.
நேசிக்கப்படுவாய்.
வாசி
வாசிக்கப்படுவாய்
எழுது
எழுதப்படுவாய்.

விலகியே இருந்தால் மட்டுமே
விலக்கப்படுவாய்.

பிடித்திருந்தால்… வாக்களியுங்கள்..நன்றி

கி.மு : ஏகூத் பின்னிய சதி வலை

 haman_mordechai

இஸ்ராயேல் மக்களை மேசேக்குப் பின்பு திறமையாக வழிநடத்தியவர் யோசுவா. அவருடைய மறைவிற்குப் பிறகு அவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டிகள் இல்லாமல் போயிற்று. கானான் நாட்டில் வசித்து வந்த இஸ்ரயேலர்கள் கானானியரை முற்றிலும் விரட்டிவிடாமல் அவர்களையும் தங்களோடு தங்க வைத்திருந்தனர். அதுவே அவர்களுக்கு எதிராய் முடிந்தது. கானானியர்கள் பலுகிப் பெருகிப் பலம் கொண்டார்கள். இஸ்ரயேல் மக்களோடு கடவுள் இருந்ததால் அவர்களை கானானியரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

காலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளையெல்லாம் மறந்து விட்டு கானானியரோடு திருமணபந்தங்களை ஏற்படுத்தவும், கானானியரின் தெய்வமான பாகாலை வணங்கவும் துவங்கினார்கள். இஸ்ரயேல் மக்கள் தங்கள் இனத்தில் தான் பெண்கொள்ளவேண்டும் என்பதே அவர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த கட்டளை. அதை இஸ்ரயேலர்கள் மீறத் துவங்கினார்கள். தன்னைப் புறக்கணித்த இஸ்ரயேலர் மீது கடவுள் கோபம் கொண்டார். அவர்களைக் கைவிட்டார். கானானியரின் கை ஓங்கியது. அவர்கள் இஸ்ரயேலரை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்து கொடுமைப்படுத்தத் துவங்கினார்கள்.

அந்நாட்களில் மோவாப் நாட்டை எக்லோன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மிகச் சிறந்த போர்வீரன். அவனுடைய ஆட்சியில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் மேல் அரசன் கடுமையான வரிகளைச் சுமத்திக் கொடுமைப்படுத்தினான். இஸ்ரயேல் மக்கள் நிம்மதியின்றித் தவித்தார்கள்.

இஸ்ரயேலர்கள் கடவுளை விட்டு விலகிச் செல்வதும், மீண்டும் மனம் மாறிக் கடவுளை நம்புவதும் அடிக்கடி நடந்தது. இந்த முறையும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த தங்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் மனமிரங்கினார். அவர்களுக்கு வழிகாட்ட நியாயாதிபதி ஒருவரை நியமித்தார். அவர் தான் ஏகூத்.

ஏகூத் இஸ்ரயேல் மக்கள் தலைவர்களை ஒன்றுகூட்டினார்.

‘நாம் இந்த மன்னனின் கீழ் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகப் பெரும் கஷ்டத்தை அனுபவித்துவிட்டோ ம். இனிமேலும் நாம் சும்மா இருந்தால் நம்முடைய மூதாதையர்கள் நானூறு ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்பட்டது போல நாமும், நம்முடைய வருங்காலத் தலைமுறையினரும் கஷ்டப்படுவார்கள். எனவே இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்’ ஏகூத் சொன்னார்.

‘நாங்கள் என்ன செய்யவேண்டும் ?’ மக்கள் பிரதிநிதிகள் கேட்டார்கள்.

‘முதலாவதாக நீங்கள் யாரும் இனிமேல் பாகாலை வழிபடக் கூடாது. நம்முடைய கடவுளைத் தான் வழிபட வேண்டும். நமக்கு ஒரே ஒரு கடவுள் தான். அவரே உண்மையானவர் என்பதை பலமுறை நாம் கண்டிருக்கிறோம். எனவே நம் வழிகளை மாற்றிக் கொண்டு நம் கடவுளில் நிலைத்திருக்கவேண்டும்’

‘இரண்டாவதாக, நமக்கு நல்ல வழிகாட்டிகள் இல்லை. எனவே என்னுடைய தலைமையை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். நான் உங்களுக்காக கடவுளின் அருளோடு போராடுவேன்’ ஏகூத் சொல்ல அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்.

‘இப்போது மன்னனுக்குச் செலுத்தவேண்டிய வரிப்பணத்தையெல்லாம் என்னிடம் கொடுங்கள். இந்தமுறை நான் அதை மன்னனிடம் கொடுக்கிறேன்’ ஏகூத் சொன்னார். மக்கள் அவ்வாறே செய்தனர்.

‘நீங்கள் எல்லோரும் ஒரு போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நாம் போரிட வேண்டி வரலாம்’ ஏகூத் கூடியிருந்த மக்களிடம் கூறினார்.

ஏகூத் இடதுகைப் பழக்கம் கொண்டவர். எனவே எப்போதும் தன்னுடைய கத்தியை இடுப்பின் வலது பக்கத்தில் சொருகி வைப்பது அவருடைய வழக்கம். இந்தமுறையும் அவர் ஒரு கூர்மையான கத்தியை எடுத்து அதை தன் இடையின் வலது பக்கத்தில் மறைத்து வைத்தார். பின் மன்னனுக்குரிய வரிப்பணத்தையும் எடுத்துக் கொண்டு மன்னனின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார்.

வரிப்பணத்தோடு ஏகூத் வருவதைக் கண்ட மன்னன் மகிழ்ந்தான்.

‘அரசே…. எங்கள் தலைவரே.. இதோ உமக்கான வரிப்பணம்’ ஏகூத் போலி பவ்யம் காண்பித்தார்.

‘நல்லது. உங்களை நான் பாராட்டுகிறேன். சரியான நேரத்தில் வரிப்பணத்தைச் செலுத்துவதில் நீங்கள் கெட்டிக் காரர்கள்’ மன்னன் சிரித்தான். அரசவை மொத்தமும் சிரித்தது.

‘மன்னனே… உங்கள் அரசாட்சியில் நாங்கள் நலமுடன் இருக்கிறோம். எனவே வரிப்பணம் செலுத்துவதில் எங்களுக்கு எப்போதும் தாமதம் ஏற்படுவதில்லை’ ஏகூத் வஞ்சகமாய் புகழ்ந்தான். வரிப்பணத்தையெல்லாம் மன்னனிடம் ஒப்படைத்த ஏகூத் மன்னனை நோக்கி,

‘அரசே ஒரு விண்ணப்பம்’ என்றார்.

‘சொல்… என்ன விண்ணப்பம் ? வரியைக் குறைக்கவேண்டுமா ?’ மன்னன் நகைத்தான்.

‘இல்லை அரசே. இது மிக மிக ரகசியமானது. உம்மிடம் மட்டுமே சொல்லவேண்டும். இந்த அரசவைப் பணியாளர்கள் கூட கேட்கக் கூடாது’ ஏகூத் சொன்னார்.

‘ சரி என்னுடன் வா…’ மன்னர் ஏகூரை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றான். அந்த அறை எப்போதுமே குளிர்ச்சியாக இருக்குமாறு கட்டப்பட்டிருந்தது.

‘சொல்.. என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் ?’ மன்னன் கேட்டான்.

ஏகூத் தாமதிக்கவில்லை, கணநேரத்தில் தன்னுடைய வலது இடையில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் உருவி எடுத்து மன்னன் சுதாரிக்கும் முன் அவனுடைய வயிற்றில் குத்தினார். கத்தி மன்னனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபுறம் வந்தது. மன்னன் கத்தாமலிருக்க தன்னுடைய வலது கையினால் மன்னனுடைய வாயைப் பொத்திய ஏகூத்,’ அரசே… இதுதான் நான் சொல்ல வந்த ரகசியம்’ என்று ஆத்திரக் கண்களோடு உறுமினார். மன்னனின் கண்கள் மரணபயத்தில் தத்தளித்து அடங்கியது. மன்னன் இறந்தான்.

ஏகூத் எதுவுமே நடவாதவர் போல மெதுவாக அரண்மனையை விட்டு வெளியேறினார். சற்றும் தாமதியாமல் உடனே சென்று தயாராய் இருந்த இஸ்ரயேல் மக்களை ஒன்று சேர்த்து மன்னனுக்கு எதிராகப் போரிடவும் தயாரானார்.

அறைக்குள் சென்ற மன்னன் நீண்டநேரமாக வெளியே வராததால் அரச அலுவலர்கள் அரசர் சென்ற அறைக்குள் நுழைந்தனர். அங்கே அரசன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு ஒட்டுமொத்தமாக அதிர்ந்தார்கள்.

‘ஐயோ… நமது மன்னனை அந்த இஸ்ரயேலன் கொன்று விட்டான்’

‘உடனே படைத்தளபதியை வரவழையுங்கள்… இஸ்ரயேலர்களை அழித்தொழிக்க வேண்டும்…’

‘என்ன ஆயிற்று.. ஏன் பதட்டப்படுகிறீர்கள் ?’

அரண்மனை சடுதியில் பரபரப்புக்குத் தாவியது. ஆனால் அதற்குள் ஏகூத் இஸ்ரயேலர் படையோடு அரண்மனையைத்தாக்கினார். போருக்குத் தயார் நிலையில் இல்லாத அரண்மனை வீரர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. மோவாபியர் படை படுதோல்வி கண்டது. இஸ்ரயேலர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

நீண்ட நாளைய அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்ட ஏகூரையும், ஏகூத் வழியாகச் செயலாற்றியக் கடவுளையும் இஸ்ரயேலர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

 

பிடித்திருந்தால்…… வாக்களியுங்கள்… நன்றி

கி.மு கதைகள் : ஆயி நகரமும், நின்று போன சூரியனும்

jozua

எரிகோ நகரத்தைப் பிடித்தபின் இஸ்ரயேலரின் பார்வை ஆயி என்னும் நகரின் மீது விழுந்தது.

ஆயி பட்டணத்தையும் கைப்பற்றவேண்டும் என்று யோசுவா திட்டமிட்டார். அதுவும் இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாகும் என்று கடவுள் வாக்களித்திருந்தார்.

வழக்கம் போல உளவாளிகள் இருவர் ஆயி பட்டணத்துக்குள் அனுப்பப்பட்டனர். உளவாளிகள் ஆயி நகரத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு யோசுவாவிடம் தாங்கள் பார்த்தவற்றைத் தெரியப்படுத்தினர்.

‘தலைவரே…. ஆயி பட்டணத்தைப் பிடிப்பது கடினமான பணி அல்ல. அதை மிக விரைவாக நாம் கைப்பற்றிவிட முடியும்’ உளவாளிகள் சொன்னார்கள்.

யோசுவா ஆனந்தமடைந்தார். இஸ்ரயேல் மக்களிடையே இருந்த வலிமையானவர்களை எல்லாம் ஒன்று திரட்டி போருக்குத் தயாரானார். மக்கள் ஆயி நகரத்தையும் பிடித்து விடும் நோக்கில் அந்த நகரத்தின் மீது போர் தொடுத்தார்கள்.

ஏமாற்றம் ! ஆயி நகர வீரர்கள் இஸ்ரயேலர்களைத் துரத்தியடித்தனர்.

இஸ்ரயேலர்களால் இதை நம்பவே முடியவில்லை. கடினமான எரிகோ நகரத்தைத் தங்களுக்கு வெற்றி இலக்காக்கிய கடவுள், ஆயி பட்டணத்தை மட்டும் ஏன் ஒப்படைக்கவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர்.

யோசுவா மனம் தளர்ந்தவராக கடவுளிடம் முறையிட்டார்.

‘கடவுளே… உமது கட்டளைப்படி தானே போரிட்டோ ம். ஆனாலும் தோல்வி கிடைத்ததே…. ‘ என்று கலங்கி மன்றாடினார்.

கடவுள் யோசுவாவின் வேண்டுதலுக்குப் பதிலளித்தார். ‘ என்னுடைய கட்டளையை ஒரு இஸ்ரயேலன் மீறிவிட்டான். நான் எடுக்கக் கூடாது என்று சொல்லியும் எரிகோ நகரத்திலிருந்து அவன் பொருட்களைத் திருடி வைத்திருக்கிறான். அது தீட்டானது. அது தான் உங்கள் தோல்விக்குக் காரணம்’

கடவுள் சொன்னதைக் கேட்ட யோசுவா மிகவும் கோபமடைந்தார்.

‘மூடர்களே… இன்னும் கடவுளுக்கு எதிராய் நடக்கிறீர்களே. உங்களை எப்படித் தான் திருத்துவது. எரிகோ நகரத்திலிருந்து பொருளை கொள்ளையடித்து வைத்திருக்கும் அந்த பேராசைக்காரன் யார் ?’ என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

‘அது யார் என்பதைக் கண்டுபிடித்து உடனே அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்’ யோசுவா மக்களிடம் சொன்னார்.

மக்கள் தங்களுக்குள்ளேயே தேடி ஆகார் என்பவன் எரிகோவின் சாபத்தீடான பொருட்களை வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர். அவன் யோசுவாவின் முன்னால் கொண்டு நிறுத்தப்பட்டான்.

‘ஆகார்… ஏன் கடவுளின் கட்டளையை மீறினாய் ?’ யோசுவா கோபத்தில் கேட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை.

‘பார்.. உன்னால் தான் நாம் தோல்வியடைந்தோம். நம் வீரர்கள் பலர் இறந்து விட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் உன்னுடைய பேராசை தான். பேராசைக்காரனுடைய முடிவு அழிவு மட்டுமே’ யோசுவா சொன்னார். ஆகார் தலைகுனிந்து நின்றான்.

‘கல்லால் எறிந்து இவனைக் கொன்றுவிடுங்கள்’ யோசுவா ஆணையிட்டார்.

மக்கள் தங்கள் கைகளில் கிடைத்த கற்களை ஆகாரின் மீது வீசினர். ஆகார் இரத்தவெள்ளத்தில் மிதந்தான். பேராசை பிடித்த அவன் அந்த மண்ணிலேயே சமாதியானான்.

யோசுவா வீரர்களை மீண்டும் ஒன்று சேர்த்தார்.

‘இப்போது நான் புதிய ஒரு அணுகுமுறையை வைத்திருக்கிறேன்… கவனமாய்க் கேளுங்கள்’ யோசுவா சொல்ல மக்கள் கவனமானார்கள்.

‘முப்பதினாயிரம் வீரர்கள் நகருக்கு வெளியே சற்றுத் தொலைவில் மறைந்திருக்கவேண்டும். இந்த முப்பதாயிரம் வீரர்களும் நம்மிடமுள்ளவர்களில் சிறந்தவர்களாக இருக்கவேண்டும். மற்ற மக்கள் ஆயி நகரத்தைப் பிடிப்பதற்குப் போவது போல உள்ளே செல்ல வேண்டும். அப்போது ஆயி நகர வீரர்கள் நமக்கு எதிராய் போரிடுவார்கள். நாம் பயந்து பின் வாங்குவது போல பின்வாங்கி ஓடவேண்டும். அவர்கள் நம்மைத் துரத்திக் கொண்டே வருவார்கள். நாம் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்…. இந்த நேரத்தில் நகருக்கு அருகில் ஒளிந்திருக்கும் நம் முதல்தர வீரர்கள் முப்பதினாயிரம் பேரும் நகருக்குள் நுழைந்து நகருக்குத் தீயிடவேண்டும்…’

யோசுவா சொன்ன யோசனையை மக்கள் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘இது மிகவும் சிறப்பான யோசனை. நமக்கு இதில் வெற்றி நிச்சயம்…’ மக்கள் சொன்னார்கள்.

‘நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லாதீர்கள். கடவுள் நமக்கு வெற்றி தருவார் என்று சொல்லுங்கள்’ யோசுவா திருத்தினார்.

போருக்கான நாளும் வந்தது. யோசுவாவின் திட்டம் கனகட்சிதமாக நிறைவேறியது. முப்பதாயிரம் பேர் ஒளிந்துகொள்ள, மற்றவர்கள் நகருக்குள் நுழைந்தபோது துரத்தப்பட்டனர். உடனே அந்த முப்பதினாயிரம் பேரும் நகருக்குள் நுழைந்து நகரைத் தீயிட்டு அழித்தனர். நகர் எரியும் சத்தத்தைக் கேட்ட ஆயி நகர வீரர்கள் துரத்துவதை விட்டுவிட்டு நகரைக் காப்பாற்றுவதற்காக திரும்பி வந்தார்கள். அதுவரைக்கும் புறமுதுகிட்டு ஓடுவதாய் நடித்துக்கொண்டிருந்த இஸ்ரயேலர்கள் ஆயி வீரர்களைத் துரத்தினார்கள். இருபுறமும் இஸ்ரயேல் வீரர்களால் தாக்கப்பட்ட ஆயி நகர வீரர்கள் போரிட்டு மடிந்தார்கள்.

அவ்வாறு ஆயி நகரமும் இஸ்ரயேலர்களின் வசமாயிற்று

எரிகோவையும், ஆயி நகரத்தையும் இஸ்ரயேலர்கள் கைப்பற்றியதை அறிந்த கிபியோனியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இஸ்ரயேலர்களிடம் வந்து சமாதானம் செய்து கொண்டனர். எமோரியர்களின் அரசர்கள் ஐந்து பேர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டனர். கிபியோன் மிகவும் செல்வச் செழிப்பான ஊர். எனவே அதை இஸ்ரயேலர்களிடம் கொடுக்காமல் கைப்பற்றவேண்டும் என்று அந்த ஐந்து அரசர்களும் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் திரட்டிக் கொண்டு போய் கிபியோன் நகரை முற்றுகையிடத் தீர்மானித்தார்கள். செய்தி கிபியோனியர்களின் காதுக்குப் போயிற்று. கிபியோன் மன்னன் யோசுவாவிடம் ஓடிவந்தான்.

‘இஸ்ரயேல் தலைவரே… நீர் தான் எங்களுக்கு உதவ வேண்டும்’

‘என்ன நிகழ்ந்ததென்று சொல்லுங்கள். பதட்டப்படாதீர்கள்’ யோசுவா சொன்னார்.

‘ஐந்து மன்னர்கள் இந்த நாட்டின் மீது படையெடுத்து வருகிறார்கள். நீங்கள் தான் எனக்கு உதவவேண்டும்’ மன்னன் கேட்டான்.

யோசுவா உடனே தன்னுடைய வீரர்களை அழைத்தார்.

‘எல்லோரும் போருக்குத் தயாராகுங்கள். அவர்கள் நம்மைத் தாக்கும் முன் நாம் அவர்களைத் தாக்க வேண்டும். எனவே அவர்கள் தங்கியிருக்கும் கூடாரத்துக்கே சென்று அவர்களைத் தாக்குவோம்’ என்றார்.

பெரிய படை ஒன்று புறப்பட்டு அந்த ஐந்து அரசர்களும் பரிவாரங்களோடு தங்கியிருந்த பகுதிக்குச் சென்றது. அவர்கள் அனைவரும் இரவில் ஓய்வெடுத்துக்க் கொண்டிருக்கையில் இஸ்ரயேலர்கள் தாக்கினார்கள்.

திடீர்த்தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத எதிரி அரசர்களின் படைவீரர்கள் நிலைகுலைந்தார்கள்

யோசுவா வானத்தை அண்ணாந்து பார்த்து ‘ சூரிய சந்திரர்களே நீங்கள் இந்த போர் முடியும் மட்டும் வானத்திலேயே இருக்கவேண்டும். ‘ என்று கடவுளின் பெயரால் கட்டளையிட்டார். என்ன ஆச்சரியம் இரண்டு நாட்களாக சூரியன் மறையவேயில்லை.

இதைக்கண்ட எதிரி மன்னர்கள் பயந்து நடுங்கி கிடைத்த திசைகளில் தப்பியோடினார்கள்.

‘கடவுளே எதிரிகளை ஒழிக்க எங்களுக்கு உதவும்’ யோசுவா வேண்டினார். உடனே வானத்திலிருந்து கல்மழை எதிரிகளின் மேல் பொழிந்தது. எதிரிகள் எல்லோரும் கல்மழைக்குப் பலியானார்கள். ஆச்சரியப்படும் விதமாக இஸ்ரயேலர்களை கல்மழை ஒன்றும் செய்யவில்லை.

இவ்வாறு கடவுள் எமோரியருக்கு எதிரான போரிலும் இஸ்ரயேலருக்கே வெற்றியளித்தார்.

பிடித்திருந்தால்…. வாக்களியுங்கள்… நன்றி !

கவிதையில் கமல்…

கமல்…

( நடிகர்களைப் பற்றிக் கவிதையெழுதினால் கவிதையின் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கருதாதவர்களுக்காக இந்தக் கவிதை….   )
 Kamal_Hassan

எல்லோரும்
நடிப்புச் சாளரங்களை
எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
நடிப்பு
இவன் வீட்டைத் தான்
எட்டிப் பார்த்து பிரமித்தது.

தாய் வயிற்றுக்குள்
நடிப்புப் பழகிய
ஒரே மனிதன்
இவனாய்த் தான் இருக்க வேண்டும்.

அதன் முன்னேற்றமே
முதல் அழுகையாய்
அரங்கேறியிருக்க வேண்டும்.

நடிப்பை
அணிந்து பார்க்க
எல்லோரும் ஆசைப்பட்டபோது
துணிந்து பார்க்க
ஆசைப்பட்டவன் இவன்.

அதனால் தான்
வீட்டுக் கண்ணாடியில்
இவனுக்கு மட்டும்
தினம் தினம் புது பிம்பம்.

தரையில் விழும்
நிழல் கூட
ஒரே மாதிரி இருந்ததாய்
வரலாறு இல்லையாம்.

இவன் வீட்டுக்
காவல் நாய் கூட
தினம் தோறும்
திணறிப் போவது வாடிக்கையாம்.

நெருப்பு என்றால்
வாய் வேகாது என்பர்
பொய்.
அழு என்றால்
அடுத்த வினாடி
கண்ணணை திறப்பவன் இவன்.

உரக்கப் பேசியே
பழகிய திரையுலகை
விழிகளால் பேசியே
விழ வைத்தவன் இவன்.

இவன்
ஐந்தில் வளைந்ததால்
ஐம்பதிலும் நிமிர்ந்து
நிற்பவன்.

மயிலே மயிலே
என்றால்
இவனுக்காய்
இறகு போடக் காத்திருக்கும்
இதயங்கள் ஏராளம்.

இவன் வாழ்வில்
அடிக்கும்
ஒவ்வோர் அலையும்
பூவையர் இதயங்களில்
புயல் சேதத்தை விளைவிக்கிறதாம்.

அரிதார இளைஞர்களுக்கு
அரிதாகவே கிடைக்கும்
அவதாரம் இவன்.

விருதுகள் இவன்
தலையிலமர்ந்து
கர்வப்பட்டன.
ஓட்டத்தில் எப்போதுமே
தோற்றுப் போகும்
ஆஸ்கர் மட்டும் அவமானப்பட்டது.

பிடித்திருந்தால் …வாக்களிக்கலாமே… நன்றி

யோகியாரின் பருந்துப் பார்வை !

மன விளிம்புகளில் : ஒரு பருந்துப் பார்வை (யோகியார்)
Kaviyogi_Vedham1கவிதைகள் வெறும் வார்த்தைகளின் தேர்வலம் அல்ல; அவை உணர்வுகளின் ஊர்வலம்–என அட்டகாசமாகத் தனது முன்னுரையில் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் ‘சேவியரின்’ ‘மன விளிம்புகளில்’ என்ற கவிநூலை நிதானமாக,சொல்விடாமல் படித்தேன்.
பல கவிகளில் தேன்வரிகள்,புதிய சிந்தனைகள்,கற்பனை வளம் யாவும் மிளிரக் கண்டு மகிழ்ந்தேன்.இதுகவிதை அல்ல என ஆரம்பிக்கும் தன் முதல் பாட்டிலேயே
நம் மனத்தைக் கீழ்வரும் வரிகளால் கவர்ந்துவிடுகிறார்;

‘”தோகைகளைப் பாடிவிட்டு,
மயிலைச் சூப் வைத்துக் குடிக்கச் சம்மதமில்லை எனக்கு
–”

என அழகுறச்சொல்லிவிட்டு,
‘விளக்குகளை ஏற்றி, வீதிகளில் வைப்பதே
பாதசாரிகட்குப் பயன்
..

என்று சொல்லி தன் கவிதைகளால் ரசிகன் மனத்தைக் கவர்ந்து அவனை ஒரு ஒளிப்பாதையில் அழைத்துச் செல்லவேண்டும்..என்ற தன்(ஆர்வ) நிலையைத் தெளிவுறக் காட்டுகிறார்;
காணாமல் போன கல்வெட்டுகள்’-என்ற அடுத்த கவியின் மூலம் நாம் எதனைச் சிறப்பாகச் செய்கிறோம்/செய்துவிட்டோம் என இறுமாப்பு கொள்கிறோமோ அது காலத்தால் மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறது;
நம் செயல்,புகழ் இவற்றை நாம் அன்பு செய்பவர்களிடமே எதிர் பார்க்கமுடியும் என்று சொல்லாமல் சொல்கிறார்.இப்படி அவர் வரிகளின்மூலம், ‘நேரடியாக தம் கருத்தைச் சொல்லாமல் உவமை, உருவகம் போன்றவற்றின் மூலம்
மிக அழகாக ஒரு புதிய ‘யுத்தி’யைக்கடைப்பிடித்துக்காட்டுகிறார்.

இவர் சொல்வது புரிகிறது: ஏனெனில் வாசகனுக்குத் தான் சொல்வது புரியவேண்டும் என மெனக் கெட்டிருக்கிறார்.பல உவமேயங்களை, சிந்தனைகளை(தம் மூளையைக்கசக்கி–ஆனால் இயல்பாகத்தோற்றும் படி)
இதற்காகக் கையாண்டுள்ள அவர் திறம் வியக்கத்தக்கது;உ-ம்; ” எதுவுமே உன் மரணப்படுக்கையில்..

இரண்டு கேள்விகளே
பெருமூச்சாய் விடும்;அவை,
நீ யாரை அன்பு செய்தாய்;
உன்னை யார் அன்பு செய்தார்கள்
?”

ஆகா!என்ன அழகான ‘கோடிட்டுக் காட்டுதல்!

இப்படி தம் கவிச் சொற்கள் மூலம் இயல்பான வாழ்க்கை நடைமுறைத் தத்துவத்தை, இன்றைய சமுதாய அவலங்களை ஆழமாகத் தொட்டுக் காட்டுகிறார். இந்த உத்தி பலருக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்;
அடே மனிதா! நீ என்றும் இயல்பாய் இருந்து தொலையேன்!

எதிரி நகைச்சுவையாக ஏதோ சொன்னாலும் அன்புடன் சிரியேன்;
இன்று எதிரில் இருக்கும் இலைகளை,பூக்களை வருட உன் மனம் விரும்புகிறதா? அதில் கூச்ச-நாச்சம்,அக்கம் பக்கம் பாராமல் இயல்பாக அதைச் செய்து மகிழேன்; ஏன் பிறர்க்காக(அவன் என்ன சொல்வானோ என -)உன் இயல்பை மறைத்து வேண்டுமென்றே நீ எப்போதும் கஷ்டப்படுவதுபோல் பிறர்க்குக் காட்டிக்கொள்கிறாய்? அதில் உனக்குஎன்ன மகிழ்ச்சி? (பிறருடைய ‘த்ருஷ்டி” தன் மேல் பட்டுவிடுமோ என்று இப்போதெல்லாம், தன் மகிழ்வைக்கூட பலர்  மறைத்துக்கொள்வதைக்காண்கிறேன்)
அவர்கட்கு சேவியர் நல்ல சவுக்கடி கொடுத்துள்ளார்;

இந்தக்கணத்தின் இன்பம் நாளை உன்னைத்தீண்டாமல் போகலாம்;
எனவே உன் இதயத்தைக் காயப்படுத்தும் கவண்களின் முதல் சுவட்டிலேயே
நீ ஜாக்கிரதையாக இரு:(அதாவது உபனி”த்’ சொல்வதுபோல் துன்ப எண்ணங்களை ‘ஆழ் மனத்தில்’ போட்டுக்கொண்டு அவத்தைப்படாதே;)

என மிக அருமையாக இன்றைய மனிதனுக்கு எடுத்துச் சொல்கிறார்.பலே! என
சொல்லத்தோன்றுகிறது.

இதுபோன்ற அறிவுரைகள் ‘வெள்ளைக்காகிதம்’ எனக்குப்பின்னால் வாருங்கள்”கீழ்நோக்கும் ஏணிகள்’–போன்ற பல கவிகளில் விரவிக்கிடக்கின்றன;
சுருக்கமாகச் சொல்லப்போனால் பல புதிய கவி வீச்சுக்களை- இவர் வரிகளில் கண்டு பிரமித்தேன்; புதுக் கவிதைக்கு இதுதான் இலக்கணம் என்று இவர் கவிதையை வைத்து அடித்துச் சொல்வேன்;

ஆம்! இப்போதைய வார ஏடுகளில் புதுக்கவி.. எனும் பேரில் வெறும் வரட்டு- வார்த்தைக் கூச்சலே காண்கிறேன். அவற்றைக் காண்கிற (வெறுத்துப்போன) எனக்கு சேவியர் கவிதை புதிய நல்ல ஒத்தடம் கொடுத்தது; சுகம் அளித்தது; நெஞ்சில் பரவச ஒளி தோன்றி மகிழ்வளித்தது;
நிஜமே அழகு; இயல்பே அழகு; படைப்புக்களின் மகத்துவம் இயல்புகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது; பூவுக்கு இதழழகு;கடிகாரத்துக்கு முள்ளே அழகு(உண்மையன்றோ?) ஆகவே எதையும் இயல்பாகப் பார்க்கக் கற்றுகொள் நண்பா!
நீயாக இயல்பான வி”யங்களில் போய் ,வேறு விதமாகக் கற்பனை செய்துகொண்டு துன்புறாதே!

புரிந்துகொள்!..ஆம்!

நீ யாரையோ பிரமிக்கும் அதே கணம்
யாரோ உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்
..’
என்று யதார்த்தத்தை அழகாகப் பிரதிபலிக்கிறார் கவிஞர்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; இடமில்லை; நீளமாகிவிடும் இவ்வலை.
நிசமாக எனக்கு இந்நூலில் பிடித்த சிறந்த கவிகள்;

“மழலைக்கால சிந்தனைகள்’
தொலை நகரம்’
இதுவும் பழசு’(நம் புதிய சிந்தனை என ஒன்றுமில்லை’யாவும் பிரபஞ்சத்தில்
ஏதோ ஒருவகையில்’எண்ணங்கள்’ அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன; என்கிறார்; என்ன தன்னடக்கம்- கருத்து இயல்பில், உண்மைதானே!)
யான் கூட ஒருசமயம் இப்படி எழுதினேன்;

..”‘காஸ்மா என்னும் ‘காப்சூலில் அன்பனே!
எந்தத் தத்துவமும்,எந்தபுதுக் கருத்தும்
வித்தில் மறைந்துள காயின்விச் வரூபம்போல்
ஒளிந்துளது! உனது’ என்பது ஒன்றுமில்லை..”

பொதுவாக இவர் கவிதைகளில் ‘வெளியே’ பார்க்கும்வரட்டுத் தன்மையைவிட
‘உள்ளே” பார்த்துத் தெளிவாய் கவிக்காப் சூலில் அளிக்கும் ஞானம்
நிறையவே உள்ளது என உணர்வுபூர்வமாயறிந்துகொண்டேன்.

வாழ்க! வளர்க சேவியர்!
(கவி யோகி வேதம்)

 

« பழைய வரவுகள்